மடு மாதா திருத்தலம்-கர்தினால் இரஞ்சித் தலைமையில் திருப்பலி

மடுமாதா திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - AFP

18/08/2016 15:39
 
 

ஆக.18,2016. ஆகஸ்ட் 15, அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று, இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில், மடுமாதா திருத்தலத்தில், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தலைமையில், ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிறைவேறியது. மன்னார் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கால் (Galle) ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே, கண்டி ஆயர் வியான்னி பெர்னாண்டோ மற்றும் அனந்தபுரா ஆயர் நோர்பெர்ட் அந்த்ராதி ஆகியோர் இக்கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்டனர். இப்பெருவிழாவையொட்டி இத்திருத்தலத்தில் நடைபெற்ற நவநாள் காலத்தில், இயேசு சபை புலம் பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர், அலெக்ஸ் யாகூ அவர்கள், இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மறையுரைகளை வழங்கினார். ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் கூடிவரும் மடுமாதா திருத்தலம், இலங்கையின் மிக முக்கியத் திருத்தலம் என்றும், இலங்கை உள்நாட்டுப் போரில் 1999ம் ஆண்டு, இவ்வாலயத்தில் வீசப்பட்ட குண்டுகளால், 44 பேர் இறந்தனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.2015ம் ஆண்டு, சனவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கைக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, மடுமாதா திருத்தலத்திற்கு ஒரு திருப்பயணியாகச் சென்று அன்னையை வணங்கி வந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட விழாவுக்கு இலச்சினை

அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட விழாவுக்கு அதிகாரப்பூர்வ இலச்சினை - RV

19/08/2016 15:57
 
 

ஆக.19,2016. வருகிற செப்டம்பர் 4ம் தேதி, வத்திக்கானில் நடைபெறவிருக்கின்ற, அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட விழாவின் அதிகாரப்பூர்வ இலச்சினையை மும்பை கத்தோலிக்கர் ஒருவர் உருவாக்கியுள்ளார். மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள, மஹிம் புனித வெற்றி அன்னை மரியா பங்கைச் சேர்ந்த Karen D'Lima Vaswani அவர்கள், இந்த இலச்சினையை உருவாக்கியுள்ளார். இந்த இலச்சினையை உருவாக்கியது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ள Karen D'Lima அவர்கள், தான் ஒருபோதும் அன்னை தெரேசாவைச் சந்தித்தது கிடையாது, ஆயினும், அவரின் பிறரன்புப் பணியைத் தான் எப்போதும் வியந்து, அதில் தன்னை ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட விழாவுக்கு, வத்திக்கான் வழங்கியுள்ள கருப்பொருளின் அடிப்படையில், இறைவனின் கனிவையும், அவரின் இரக்கமுள்ள அன்பையும் எடுத்துச் செல்பவராக, அன்னை தெரேசா அவர்களைச் சித்தரித்திருப்பதாகக் கூறியுள்ளார் Karen D'Lima.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

இந்தியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் இறையடியார்

இறையடியார் அருள் சகோதரி மேரி பெர்னதெத் கிஸ்போட்டா பிரசாத் - RV

10/08/2016 16:25
 
 

ஆக.10,2016. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், புனிதராக உயரத்தப்படுவதற்குத் தேவையான தன் பயணத்தைக் துவங்கியிருப்பது, கடவுளின் கருணையால் நிகழ்ந்த ஒரு செயல் என்று ராஞ்சி பேராயர், கர்தினால் டெலெஸ்ஃபோர் டோப்போ அவர்கள் கூறினார். இந்தியாவின் சோட்டா நாக்பூர் பகுதியின் பழங்குடியினத்தைச் சேர்ந்த அருள் சகோதரி மேரி பெர்னதெத் கிஸ்போட்டா பிரசாத் அவர்கள், புனித அன்னம்மாள் புதல்வியர் என்ற துறவு சபையை நிறுவியவர்.

இந்த அருள் சகோதரியை புனிதராக்கும் முயற்சிகளைத் துவங்க, திருப்பீடம் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, அருள் சகோதரியை இறையடியார் என்று, ராஞ்சி கர்தினால் டோப்போ அவர்கள், இத்திங்களன்று அறிவித்த திருப்பலியில், பழங்குடி மக்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வரம் இது என்று குறிப்பிட்டார். அருள்சகோதரி மேரி பெர்னதெத் அவர்களை புனிதராக உயரத்துவதற்குத் தேவையான வழிமுறைகளைத் துவக்கக் கோரி, ஜார்கண்ட், மற்றும் அந்தமான் பகுதிகளில் பணியாற்றும் 9 ஆயர்கள், கர்தினால் டோப்போ அவர்களுடன் இணைந்து, கடந்த நவம்பர் மாதம், வத்திக்கானுக்கு விண்ணப்பத்தினர் என்று, ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

1878ம் ஆண்டு பிறந்த மேரி பெர்னதெத் அவர்கள், வேறு மூன்று இளம்பெண்களுடன் இணைந்து, 1897ம் ஆண்டு,  புனித அன்னம்மாள் புதல்வியர் துறவு சபையை நிறுவினார். சோட்டா நாக்பூர் பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ளவர்களுக்கு கல்வி கற்பிப்பதை இத்துறவு சபையின் சகோதரிகள் தங்கள் தலையாயப் பணியாக மேற்கொண்டனர் என்று ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது. சபையை நிறுவிய நால்வரில் இருவர், 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்பகுதியைத் தாக்கிய காலரா கொள்ளை நோயில் இறந்தபோதிலும், அருள்சகோதரி மேரி பெர்னதெத் அவர்கள், தன் பணிகளைத் தொடர்ந்து, 1961ம் ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி, தன் 83வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

Contact Info

Via Bari N° 44
90133 Palermo
Italy

+39 3894205524
+39 0915072322